ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்காக சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களை போன்று வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தங்களது அணிக்கு வலிமை சேர்த்து வருகின்றனர். சென்னை அணியில் மதிஷா பத்திரனா, டேரில் மிட்செல், முஸ்தபிசுர் ரஹ்மான், ஹைதராபாத் அணியில் கிளாசன், லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட வீரர்கள் தங்களது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்தை சேர்ந்த ஜாஸ் பட்லர் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இதனையொட்டி அதில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று நியூசிலாந்து அணி வீரர்களை அறிவித்தது. இன்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை கவனத்தில் கொண்டு இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இது இங்கிலாந்து அணி வீரர்கள் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று மே மாதம் 21ஆம் தேதி தொடங்க உள்ளது.
.