புதுச்சேரி: பழைய நாணயங்கள் வாங்குவதாக இணையத்தில் வந்த விளம்பரத்தை நம்பி வில்லியனூர் இளைஞர் ஒருவர் ரூ 45 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வில்லியனூரை சேர்ந்த ஒருவர் பழைய நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பழைய நாணயங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறோம் என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதை கிளிக் செய்து அதன் உள்ளே சென்று பல்வேறு விசைகளை தேடி உள்ளார். அப்போது மர்ம நபர்கள் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு உங்களிடம் உள்ள நாணயத்தின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்புமாறு எத்தனை வருடம் பழமை வாய்ந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றும் அதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
அதை நம்பிய அந்த வாலிபர் தன்னிடம் இருந்த பழங்கால நாணயங்கள் மூன்று படம் எடுத்து அவர்களுக்கு பேஸ்புக் மூலமாக அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து மோசடி நபர்கள் இந்த நாணயங்களை நாங்கள் சோதனை செய்துவிட்டோம். இது 600 ஆண்டுகள் பழமையான நாணயம். ஆகவே ஒவ்வொரு நாணயத்திற்கும் ரூ. 5 லட்சம் பணம் தருகிறோம் என்று சொல்லி கட்டு கட்டாக இருக்கின்ற பணத்தை புகைப்படம் எடுத்து வீடியோவாக நேரில் அனுப்புகிறோம்.
மேலும் நாங்கள், நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு 3 மணி நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு வில்லியனூர் வாலிபரை தொடர்புகொண்டு கோரிமேடு அருகே தங்களை போலீசார் பிடித்து பணம் கேட்பதாகவும், தங்களிடம் இன்சுரன்ஸ், லைசென்ஸ், சரியான ஆவணங்கள் இல்லாததாலும் எங்களுடைய காரில் ரூ. 30 லட்சத்துக்கு மேல் பணம் இருப்பதாலும் இது குறித்து போலீசார் கண்டுபிடித்து விட்டால் போதும். போய்விடும் என கூறியுள்ளனர்.
மேலும், உடனே பணம் அனுப்புமாறும் அதனையும் சேர்த்து வந்து கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய வில்லியனூர் வாலிபர் ரூ.44 ஆயிரத்து 800 பணத்தை அனுப்பியுள்ளார். மேலும் பணம் அனுப்ப அவர்கள் கேட்டதால், வில்லியனூர் வாலிபர் அவர்களுடைய மொபைல் எண் இருப்பிடத்தை சோதனை செய்தபோது அரியானாவில் இருப்பது தெரியவந்தது.
மேலும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுக்கொண்டே இருந்ததால் பணம் அனுப்ப மறுத்து விட்டார் . உடனே அவர்கள் இணைப்பை துண்டித்து விட்டனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏமாற்றியோரை தேடி வருவதாக கூறப்படுகிறது.