சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம் சென்னையில் நடத்துகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டுக்கான கீழ்க்கண்ட விளையாட்டுகளில் திறமையான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும்.
12 முதல் 18 வயது பிரிவில் தடகள வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு 01.02.2025 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. 2010-ம் ஆண்டுக்கும் 2013-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களுக்கான ஆடவர் கால்பந்து பிரிவு தேர்வு 04.02.2025, 05.02.2025 ஆகிய தேதிகளில் நேரு பூங்காவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெறுகிறது.
2009-ம் ஆண்டுக்கும் 2011-ம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்களுக்கான ஆடவர் கபடி பிரிவு தேர்வு 07.02.2025 அன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்திய விளையாட்டு ஆணையம், எண். 55, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை 600 003 என்ற முகவரியில் நேரிலோ இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பெறலாம்.
தங்குமிட வசதிகளுடன் கூடிய பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கான பயிற்சிகள், விளையாட்டு உபகரணங்கள், தங்குமிட வசதி, மருத்துவ காப்பீடு, உடற்பயிற்சி கூட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். தங்குமிட வசதி அல்லாத பயிற்சிகளுக்கு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சியும், விளையாட்டு உபகரணங்களும், உரிய இட வசதிகளும் செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு- 044-25362479 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.