ஹாலிவுட்டில் தயாரான ராக்கி சீரீஸ், பாக்ஸிங் பின்னணியில் எடுக்கப்பட்ட வணிகத் திரைப்படங்களில் முக்கியமானது. அந்த நான்காவது பாகத்தின் கிளைமாக்ஸில் அமெரிக்க வீரன் ராக்கியும் ரஷ்ய வீரனும் ஐவானும் மோதிக் கொள்வதற்கு முன்பு இருவரும் பயிற்சி எடுப்பார்கள். ஐவானுக்கு அதிநவீன உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு பயிற்சி தரப்படும். அப்படியே ராக்கி பக்கம் வந்தால், பனியில் குடைசாய்ந்த குதிரை வண்டியை தூக்க உதவி செயதுகொண்டிருப்பார். மேலும் மரம் அறுப்பார், மரத்தை தோளில் சுமந்தபடி ஓடுவார். ஸ்லெட்ஜ் வண்டியில் விறகையும், ஆளையும் வைத்து இழுத்துச் செல்வார்.
எந்திரங்கள் உதவியுடன் பயிற்சி செய்கிறவன் இயற்கையிலிருந்து விலகிய ஏலியனாகவும், இயற்கையோடு இயைந்து பயிற்சி செய்கிறவன் அணுக்கமானவனாகவும், தனது வேரை நோக்கிச் செல்கிறவனாகவும் இந்தக் காட்சிகள் பார்வையாளனின் உள்மனதில் பதிய வைக்கும். வேரை நோக்கி செல்வது என்றால் என்னவோ என்று நினைக்க வேண்டாம். கிராமத்தில் பிழைக்க வழியில்லாமல் நகரத்துக்கு வந்துவிட்டு,’சொர்க்கம்னா அது கிராமம்தான்‘னு சிலாகிப்போம் இல்லையா அதுதான். இந்த மனநிலை உள்ள நாம் யார் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்போம். அமெரிக்கானா இல்லை ரஷ்யனா?
@ Google செய்திகளைப் பின்தொடரவும்:
கூகுள் செய்திகள்
பக்கத்தில்
நியூஸ்18 தமிழ்
இணையதளத்தை
இங்கே கிளிக்
செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை
உடனுடன் பெறுங்கள்.
சார்பட்டா பரம்பரை பீடி தாத்தா நமக்குப் பிடித்துப் போனதுக்கு பின்னாலுள்ளதும் இந்த மனநிலைதான். அன்றைய சென்னையின் சிறந்த பாக்ஸிங் பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார். அவரது பிரதான சிஷ்யானான மீரானை வேம்புலி சாதாரணமாக ஊதித்தள்ளுவான். சின்ன வயது முதல் பாக்ஸிங் பயிற்சி எடுத்து, பாக்ஸிங்கே கதியென்றிருக்கும் தனது மகனைவிட ராமன் திறமையானவன் என அவனுக்கு பயிற்சி தருவார். அவனை பாக்ஸிங்கை வேடிக்கைப் பார்க்கும் கபிலன் அடித்து வீழ்த்திவிடுவார். வேம்புலியையும் அவனை புரட்டி எடுப்பான். அந்தப் பகுதியில் சிறந்த பயிற்சியாளர் ரங்கன் வாத்தியாரிடம் பயிற்சி எடுத்தவன் கதியே இதுதான். சரி, இது வேலைக்காகாது என்று வெளியூரிலிருந்து பயிற்சிக்கு ஆள் கொண்டு வருவார்கள். பிறந்ததிலிருந்து பாக்ஸிங்கில் இருப்பவர்களின் நிலையே இதுதான். ஆனால், கபிலனின் அம்மா,’எங்கடா பீடி தாத்தா‘ என்று ஒரே வார்த்தையில் மகனுக்கு சரியான கோச்சை கண்டுபிடித்துவிடுவார். ரங்கன் வாத்தியாரைவிட பீடி தாத்தா எந்தவகையில் கெத்து என்று காட்ட வேண்டுமல்லவா. ஆனால், பீடி தாத்தா அதற்கு வாய்ப்பே தராமல், கபிலனை கண்டதும், எடுடா துடுப்பை என்று ராக்கி 4 இல் வருவது போன்று கடலில் துடுப்பு போட வைத்து, மணலை தோண்ட வைத்து, பீச் மணலில் ஓடவிடுவார். நல்லா கவனியுங்கள், அவர் வேறு எதுவுமே செய்யமாட்டார். ஆனால், அவரை நமக்குப் பிடித்துப் போகும். ஏன்? நமது வேரை நோக்கிச் செல்லும் மனநிலை.
இந்தியாவில் எடுக்கப்படும் விளையாட்டை மையப்படுத்திய பெரும்பாலான படங்கள் இந்த மனோபாவம் பெரிய ரோலை எடுத்துக் கொள்கிறது. ஒருவனின் வெற்றிக்குப் பின்னால் அவனது திறமையும், கடும் உழைப்பும் தாண்டி, ஒரு அவமானம் தேவைப்படுகிறது. மொழி, இனம், சாதி, வர்க்கம் என ஏதோவொன்றின் அவமானம். லக்கானிலிருந்து சார்பட்டா பரம்பரைவரை அதனைப் பார்க்கலாம். தினசரி பயிற்சி எடுக்கிற வேம்புலி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பதே நடைமுறை யதார்த்தம். பாதியில் பயிற்சியைவிட்டு, குடியில் இறங்கிய கபிலன் ஜெயிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் என்றால் அதற்கு காரணம், அவன் ஒரு விக்டிம். அவமானப்படுத்தப்பட்டவன். நாயகன் விக்டிமாக்கப்படும்போதே பயிற்சி, திறமையெல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். நமது சமூக கூட்டு மனப்பான்மையும் இதையே விரும்புகிறது. அவமானத்துக்குள்ளானவன் வெற்றி பெற வேண்டும் அல்லது வெற்றி பெற்றவனுக்கு பின்னால் ஒரு அவமானம் இருக்க வேண்டும்.
தற்போது நடந்துவரும் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில்
மீராபாய் சானு
வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சென்ற ஒலிம்பிக்கில் அவர் தூக்கிய ஆறு லிப்டில் ஐந்து பவுல். அவரை கடுமையாக அவமானப்படுத்தினார்கள். அந்த அவமானம் தந்த உத்வேகத்தால்தான் இந்தமுறை கடினமாக பயிற்சி எடுத்து பதக்கம் வென்றார் என்று எழுதுகிறார்கள். படிக்கையில் நமக்கு சிலிர்க்கிறது. அவமானம் தந்த உத்வேகம்தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றால், இன்னும் அதிகமாக அவமானப்படுத்தியிருந்தால் தங்கப்பதக்கம் வென்றிருப்பாரா என்று கேட்டால் நம்மிடம் பதிலில்லை. அவருடன் போட்டியிட்டு வென்றவர் அவரைவிட அதிக அவமானத்தை சந்தித்தவரா என்றால் அதற்கும் பதிலில்லை. பிறகு ஏன் இப்படி அவமானங்களை நாம் கொண்டாடுகிறோம்?
மேலும் படிக்க…
தனுஷ்: வெற்றிமாறன் பெயருடன் தொடர்புடைய படத்தில் நடிக்கும் தனுஷ்!
இந்தியா ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் ஏன் வெல்வதில்லை என்று கேட்டால்,’விளையாடுறவனுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை. நல்ல ஷு இல்லை, நல்ல பயிற்சியாளர் இல்லை, என்கரேஜ் பண்ண ஆளில்லை‘ என்று அடுக்குவோம். அதுவே ஒருவர் வெற்றி பெற்றால், அப்படியே பிலேட்டை திருப்பி, அவன் ஏழ்மையும், அவன்பட்ட அவமானங்களும்தான் கடுமையாக பயிற்சி செய்ய வைத்து பதக்கம் வெல்ல வைத்தது என்போம். வெற்றி பெற முடியாததுக்கு எது தடையோ அதுவே வெற்றி பெற்றபின் வெற்றி பெற்றதற்கான காரணமும்.
விளையாடினான், வெற்றி பெறுகிறான் என்பதைவிட. அவமானப்படுத்தப்பட்டவன் தனது வெற்றியால் திருப்பி அடித்தான் என்பதைத்தான் மக்கள் ரசிக்கின்றனர். அதாவது, விளையாட்டை மையப்படுத்திய படத்தையும், ஒரு பழிவாங்கும் கதையாகத்தான் எடுத்தாக வேண்டும். ஆனால், பழிவாங்குவதும், விளையாட்டில் வெற்றி பெறுவதும் வேறு. உதாரணமாக, அவமானமும், ஏழ்மையும் தரும் உத்வேகம் விளையாட்டில் வெற்றியை தரும் என்றால், ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் இந்தியா முதலிடத்தில் இருந்திருக்கும். ஆனால் அப்படியில்லையே. அடிப்படை திறமையும், தொடர் பயிற்சியுமே வெற்றியை சாத்தியப்படுத்தும். அதனால்தான், சீனாவும், ஜப்பானும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளுகின்றன.
சார்பட்டா பீடி தாத்தா திரையில் கண்டு ரசிக்க அருமையான தொன்ம கதாபாத்திரம். நகரில் இருந்து கொண்டே கிராமத்து அருமையை வியப்பது போன்று பீடி தாத்தாவையும் முடிவின்றி சிலாகித்து ரசிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .