கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவு நேரத்தில் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை, மது போதையில் கடத்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து தேவாலா அருகே உள்ள கரியசோலை பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து கரியசோலை பகுதியில் தினமும் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் நலன் கருதி காலை நேரத்தில் இயக்கப்படும்.
இந்நிலையில், நேற்று காலை கரியசோலையில் நிறுத்தியிருந்த பேருந்து காணாமல் போனதை அறிந்த ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர், பேருந்தை தேடினர். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், வாளவயல் சாலையில் உள்ள பாலம் அருகே, பேருந்து ஒரு மேட்டில் மோதி நின்றது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது, இரவு நேரத்தில் வாளவயல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிஷால் என்பவர், மது போதையில் பேருந்தைக் கடத்திச் சென்றதும், வாள வயல் பாலம் அருகே சாலையோர மேட்டில் பேருந்து மோதியதால், அங்கேயே நிறுத்திவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
பின்னர், கூடலூர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஊழியர்கள் அங்கு விரைந்து, பேருந்தை மீட்டுச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரிஷாலை கைது செய்தனர்.