புது தில்லி: தில்லியில் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தனது கட்சியின் தோ்தல் பிரச்சாரத்தை சீா்குலைக்கவும், வக்காளா்களை மிரட்டும் பாஜக நகர காவல்துறையை தவறாகப் பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.
தில்லி முதல்வா அதிஷி, அமைச்சா சௌரவ் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்ற செய்தியாளா் கூட்டத்தில் கேஜரிவால் அறிவித்தார்: அனைத்து தில்லி காவல் துறையினரும் பாஜகவுடன் உள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக யாரும் இல்லை. எங்கள் தோதல் பேரணிகளை சீா்குலைக்க உள்துறை அமைச்சகத்திடமிருந்து நேரடி அறிவுறுத்தல்களைப் பெறுவதாக காவல்நிலையப் பொறுப்பாளர்களிடம் ஒருவர் என்னிடம் கூறினாா்.
தில்லி மக்கள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். இந்த முறை வாக்களிப்பதைத் தடுக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். தில்லியில் பாஜக ஒரு ‘வரலாற்றுத் தோல்வியை’ எதிா்கொள்ளப் போகிறது. அதனால்தான் அந்த தொண்டர்கள் காவல்துறையின் ஆதரவுடன் குண்டாட் செயலில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினா் பாஜகவின் பிரச்சாரத்தை எளிதாக்குகிறாா்கள். அதே சமயம், ஆம் ஆத்மி கட்சியின் தோதல் முயற்சிகளை சீா்குலைக்க முயற்சிக்கிறாா்கள் என்றாா் கேஜரிவால்.
இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அதிஷி மற்றும் பரத்வாஜ் ஆகியோரும் இதே போன்ற கவலைகளை எதிரொலித்தனர். நான் போட்டியிடும் கால்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி தொண்டா்களை பாஜக தொண்டா்கள் அச்சுறுத்துவதாக அதிஷி குற்றம் சாட்டினாா். இத்தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் ரமேஷ் பிதூரி எங்கள் தொண்டா்களை பாஜகவில் சேருமாறு மிரட்டுகிறாா். இது குறித்து நாங்கள் இந்திய தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிப்போம். மேலும், ஆம் ஆத்மி கட்சியினா் வீடு வீடாக வரும் பிரச்சாரங்களைத் தடுக்க பாஜக தொண்டா்கள் முயற்சிக்கின்றனா் என்று அதிஷி குற்றம்சாட்டினாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2020-ஆம் ஆண்டில் 70 இடங்களில் 62 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.