வணிகம்

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கா? – 2025 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு | 2025 பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமானம் வரிவிலக்கு என்று அறிக்கை கூறுகிறது


புதுடெல்லி: அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி விதிப்பை 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, “ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பேசிய நிதித்துறை வட்டாரங்கள், ‘ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிப்பது மற்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு புதிதாக 25% வரி விதிப்பு அறிமுகப்படுத்துவது என இரண்டு வாய்ப்புகளையும் நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்.

பட்ஜெட் அனுமதித்தால் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 25 சதவீத வரி விதிப்பு ஆகிய இரண்டும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ரூ.50,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரையிலான வருவாய் இழப்பை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது’ என தெரிவித்துள்ளன.

தற்போது உள்ள புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு எந்த வரியும் இல்லை. ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், அதிகபட்ச வரி அடுக்கான 30%-ன் கீழ் வருகிறார்கள்.

உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) எனும் நிதிசார் சிந்தனையாளர்கள் அமைப்பு, 2025-26 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க வரி சீர்திருத்தங்களை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5.7 லட்சமாக உயர்த்த GTRI பரிந்துரைத்தது. 2025-ம் ஆண்டுக்குள் சேமிப்பு வட்டிக்கு ரூ.10,000 வரை விலக்கு இருந்தால், ரூ.19,450 ஆக உயர்த்த வேண்டும் என்றும், காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் PF பங்களிப்புகளுக்கு ரூ.1.5 லட்சம் விலக்கு தொகை ரூ.2.6 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளையும் GTRI முன்மொழிந்தது போன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *