சென்னை: புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஸ்டீல் பட்டறை தொழிலாளி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு, திருவிக நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (42). கொருக்குப்பேட்டையில் சொந்தமாக ஸ்டீல் பட்டறை நடத்தி வந்தார்.
தொழில் நஷ்டத்தால் அதை மூடிவிட்டு, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பட்டறையில் கடந்த 3 நாட்களாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டறையில் பணி செய்து வந்த சக பணியாளரான கொருக்குப்பேட்டை, பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மாதவன் (46) என்பவருடன் பணியின்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஸ்டீல் பட்டறை உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, ராஜன் அண்ணா நகர் வேலன் சத்திரம் அருகே உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மாதவன், தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கொருக்குப்பேட்டை ரயில்வே காலனியைச் சேர்ந்த பொங்கல் என்ற அருண்குமார் (26) வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காயம் அடைந்த ராஜன் இது தொடர்பாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்து உதவி ஆய்வாளர் மணிகண்டன் புகாரை எழுதிக் கொடுங்கள் என கூறினாராம். இதனால், ராஜன் விரக்தியுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர், இரவு 9.15 மணிக்கு ஆட்டோவில் ஆர்.கே. நகர் காவல் நிலையம் எதிரே வந்த ராஜன், புகாரை பெற்றுக் கொள்ள மறுத்த போலீஸாரை கண்டித்தும், தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத போலீசார் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஜார்ஜ் டவுன் 15-வது நீதித்துறை நடுவரிடம், ராஜன் மரண வாக்குமூலம் அளித்தார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜன், நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜன் தற்கொலைக்கு காரணமான அருண்குமார், மாதவனை கைது செய்தனர்.
அதேவேளையில் ராஜனிடம் புகார் வாங்குவதில் போலீசார் இழுத்தடிப்பு செய்தனரா என்பது குறித்து துறைரீதியான விசாரணையை காவல் துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.