திண்டுக்கல்: தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள், உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் உணவு வழங்கினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. தைப்பூசவிழாவை முன்னிட்டு மதுரை, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழநி நோக்கி பாதயாத்திரையாக சென்று முருகனை பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
தைப்பூச விழாவை முன்னிட்டு தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் குழுக்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக செல்லத் துவங்கியுள்ளனர். தைப்பூச விழா நடைபெறும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். அப்போது பல்வேறு நிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் அன்னதானங்கள் வழங்குவர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கலைவாணி கூறியுள்ளதாவது: “பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் முன்னதாகவே உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெறவேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது பின்பு அந்த இடத்தில் உணவு கழிவுகள் தட்டுகள் என குப்பைகள் சேராமல் முழுமையாக சுத்தம் செய்யவேண்டும். பக்தர்களுக்கு கண்டிப்பாக அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வழங்கக் கூடாது.
அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது. இதனை மீறுபவர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என கண்காணிக்கும் முறையில் உணவுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபடுவர்,” என்று தெரிவித்துள்ளார்.