ராமேசுவரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் சார்பாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் தை அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்யப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிவர். இந்தாண்டு தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 29 அன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை 4.00 மணிக்கு நடை திறந்து, காலை 5.00 மணிமுதல் 5.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெறும். காலை 11.00 மணிக்கு மேல் ஸ்ரீராமர் சகிதம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, முற்பகல் 11.50 மணிக்கு மேல் அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடக்கிறது, இரவு 7.00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீராமர் வெள்ளிரதம் புறப்பாடு வீதி உலா நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.