சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டி, தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டிச.8-ம் தேதிக்கு பிறகு, தங்கம் விலை உயர்ந்தது. ஜன.3-ம் தேதி ரூ.58,080 ஆகவும், ஜன.16-ம் தேதி ரூ.59,120 ஆகவும் இருந்தது. விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை தொடும் சந்தை நிபுணர்கள், தங்க நகை வியாபாரிகள் கணித்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை தாண்டி, புதிய விலை உச்சத்தை தொட்டது.
ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.60,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.75 உயர்ந்து, ரூ.7,525 ஆக இருந்தது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.65,672-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.104 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், “சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு வெளியிட்ட அறிவிப்பு ஆகியவை தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது, அமெரிக்க பொருளாதாரத்தை நிலைநாட்டவும், அமெரிக்க டாலரை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
மேலும், பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதால், பெரு முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. வரும் காலங்களில் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்ப நிகழ்ச்சிக்காக தங்க ஆபரணங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.