கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
கோவையில் கண்ணிமைக்கும் நேரத்தில் கனவு வீடு சீட்டுக்கட்டு போல் சரிந்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு, இடிந்ததால் குடியிருப்புவாசிகள் இடிந்து போயுள்ளனர். இதன் பின்னணி என்ன?..
கோவையில் ஓடை தூர்வாரும் பணியின்போது, 3 வீடுகள் இடிந்து விழுந்ததால், குடியிருப்புவாசிகள் நிர்கதியாய் நிற்கின்றனர்.
கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடை தூர்வாரும் பணியை கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 49 கோடி ரூபாய் மதிப்பில் 2.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடையை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. ஓடை கரையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. கரைப்பகுதியில் உள்ள மக்கள், முழுமையாக வீட்டை காலி செய்ய முடியாது எனக்கூறி, தூர்வார வசதியாக வீட்டின் முன்பகுதியில் ஒரு மீட்டருக்கு மட்டும் அகற்றிக் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றபோது, சுரேஷ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அருகில் இருந்த லட்சுமணன், தனலட்சுமி ஆகியோரின் வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன.
ஓடை தூர்வாரும் பணியால், ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். சங்கனூர் ஓடையை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள், மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தங்களுக்கு மாற்று இடம் அல்லது புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே, வீடுகளை இழந்த மூன்று குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பெரும்பாலானோர், வீடுகளை காலி செய்துவிட்டதாகவும் மேயர் கூறியுள்ளார்.
கோயம்புத்தூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஜனவரி 22, 2025 8:26 AM IST
சீட்டுக்கட்டு போல் சரிந்த கனவு வீடு.. நிர்கதியாய் நிற்கும் குடும்பங்கள்: கண்ணிமைக்கும் நேரத்தில் கோவையில் நடந்த சோகம்!