கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் 44 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது.
இங்கிலாந்து அணிக்காக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரில் சால்ட் விக்கெட்டை கைப்பற்றினார் அர்ஷ்தீப் சிங். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் டக்கெட் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் இணைந்து 48 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். புரூக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன்னும் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 7 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஓவர்டன் 2, அட்கின்சன் 2 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இங்கிலாந்து அணிக்கு களத்தில் நம்பிக்கை கொடுத்த பட்லர் 68 ரன்கள் எடுத்திருந்தார். அவர் 17-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் 12 மற்றும் மார்க் வுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்தின் மார்க் வுட் ரன் அவுட் ஆனார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஷமி விளையாடவில்லை.