பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே அலுவலகம், கட்டடங்களில் முதலீடு செய்து வரும் அமிதாப் பச்சன் மும்பையில் அவற்றை வாடகைக்கு விட்டு ஒவ்வொரு மாதமும் சம்பாதித்து வருகிறார். அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனும் இப்போது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் அமிதாப் பச்சன் கடந்த 2021-ம் ஆண்டு வாங்கிய வீட்டை விற்பனை செய்துள்ளார். மும்பை ஓசிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாடிகளை அமிதாப் பச்சன் 2021 ஆம் ஆண்டு ரூ.31 கோடிக்கு வாங்கினார். இதில் 6 கார்களை நிறுத்த பார்க்க வசதி உள்ளது.
மொத்தம் 5704 சதுர அடி கொண்ட இந்த வீட்டை அமிதாப் பச்சன் இப்போது விற்பனை செய்துவிட்டார். அதனை ரூ.83 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் அமிதாப் பச்சன். விற்பனை செய்யப்பட்ட வீட்டில் 4800 சதுர அடிக்கு பால்கனி வசதி உள்ளது. இந்த விற்பனை மூலம் அமிதாப் பச்சனுக்கு வெறும் 4 ஆண்டுகளில் அவர் செய்த முதலீட்டுக்கு 168 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. வீடு விற்பனையாக முத்திரை தீர்வை கட்டணம் மட்டும் ரூ.4.98 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் விற்பனை செய்துள்ள இந்த வீட்டில் நடிகை கீர்த்தி செனோன் வாடகைக்கு வந்தார். மாதம் 10 லட்சம் வாடகை செலுத்தி வந்தார். அதோடு 60 லட்சம் முன்பணமும் கொடுத்திருந்தார். அமிதாப் பச்சன் ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள், சோலார், காற்றாலைகளிலும் முதலீடு செய்து வருகிறார். 81 வயதாகும் அமிதாப் பச்சன் இப்போது மிகவும் ஆக்டிவாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.