கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் ஜாமின் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன அதிகாரி எல்.நாதன், பாலாஜி, ராமசாமி உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம். திரிவேதி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், “இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருக்கு என்னென்ன விதமான தண்டனைகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் சிபிஐ தரப்பில் இருந்து தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், “தண்டனை விவரங்கள் குறித்த முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை ஒரு விளக்கப்பட வடிவில் தயார் செய்து இரண்டு வாரத்தில் சிபிஐ மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
ஜனவரி 21, 2025 3:18 PM IST