கர்நாடக மாநிலம் மங்களூரு கூட்டுறவு வங்கியில் கொள்ளையடித்த, நெல்லையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17-ம் தேதி நுழைந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர், உ.பி.யைச் சேர்ந்த 2 பேர், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் குடியிருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், மங்களூருவைச் சேர்ந்த இருவர் என 9 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கிடையில், கொள்ளையில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்மநேரியைச் சேர்ந்த முருகாண்டி, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ஜோசுவா ஆகியோரை, அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள மங்களூரு போலீஸார் நேற்று கைது செய்தனர். இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வருவதாகவும், தற்போது மங்களூருவில் கொள்ளையடித்த நகை, பணத்துடன் சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கிலோ தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 நாட்டுத் துப்பாக்கிகள், 3 தோட்டங்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மங்களூருக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.