விளையாட்டு

நீரஜ் சோப்ரா | திருமணத்தில் நீரஜ் சோப்ரா வாங்கிய வரதட்சணை என்ன?



இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நீரஜ் சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை ஹிமானி மோரை கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. திருமணம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த நிலையில், திருமண புகைப்படம் வெளியான பின்பே அதுகுறித்து தெரியவந்தது. நெருங்கிய உறவினர்கள் முன் ஹிமாச்சல பிரதேசத்தில் திருமணம் நடந்துள்ளது.

நீரஜ் சோப்ராவின் மனைவி, ஹிமானி மோர் ஹரியானாவில் உள்ள லார்சௌலியைச் சேர்ந்தவர். சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயின்ற ஹிமானி, லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். டென்னிஸ் வீராங்கனையான ஹிமானி, ஃபிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தின் பகுதி நேர தன்னார்வ உதவி டென்னிஸ் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இருவரும் திருமணம் தொடங்கியுள்ள நிலையில், திருமணத்திற்காக நீரஜ் சோப்ரா வாங்கிய வரதட்சணை விவரங்கள் வெளியாகியுள்ளன.

தனியார் ஊடகமான “டைனிக் பாஸ்கர்” வெளியிட்ட செய்தியின்படி, ஹரியானாவி முறைப்படி நடந்த திருமணத்திற்கு மரபைக் கடைபிடிக்கும் பொருட்டு ஹிமானியின் தந்தை மணமகன் நீரஜ் சோப்ராவுக்கு ஒரு ரூபாயை (ரூ.1) வரதட்சணையாகக் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் | டொனால்ட் டிரம்ப் | அமெரிக்க அதிபராக முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட கோப்புகள்.. 8 மணிநேரத்தில் இத்தனையா?

மாமனார் கொடுத்த ரூ.1-ஐ வரதட்சணையாகப் பெற்றுக்கொண்டு ஹிமானியை நீரஜ் சோப்ரா திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் தவிர, வரதட்சணையாக வேறு எந்தப் பொருட்களோ, பணமோ, பரிசுகளோ திருமணத்தில் ஏற்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே செய்தியில் நீரஜின் திருமணம் ஜனவரி 16ஆம் தேதி நடந்தது என்றும், திருமண விழாவில் இரு குடும்பத்தினரும் சேர்த்து மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரஜின் குடும்பமும் ஹிமானியின் குடும்பமும் பல ஆண்டுகளாகப் பழக்கம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இரு குடும்பமும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *