கோவை: கோவை ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களுக்கு மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க வேண்டும் என, ‘சிஐஏ’ தொழில் அமைப்பு கருத்தரங்கில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சின்னவேடம்பட்டி தொழில்கள் கூட்டமைப்பு ‘சிஐஏ’ சார்பில் வர்த்தக மேம்பாடு கருத்தரங்கு கோவையில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று நடந்தது. ‘சிஐஏ’ தலைவர் தேவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சண்முகம் சிவா முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். தேசிய உற்பத்தி கவுன்சில் துணை இயக்குநர் விஜயராஜூ, ‘ஏசிடி’ இயக்குநர் பிரித்தி சாதாசிவனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணவும், அடிப்படை கட்டமைப்பு தேவைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு மானிய விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.