கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:
ஒரு வீரரிடம் நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினால் போதும். அதனால் அணிக்கு ஏற்படும் ஆக்கபூர்வமான மாற்றங்களை அடுத்த சில போட்டிகளிலேயே உணர முடியும். – ரிஷப் பந்த்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது ரிஷப் பந்த் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 27 கோடி ரூபாய் வாங்கப்பட்டது.
அப்போதே அவர் கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அவர் லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னர் அவர் அளித்த பேட்டியில்-
என்னுடைய கேப்டன்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். என்னுடைய சீனியர் வீரர்கள் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளனர். ஒரு வீரரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதில் ரோகித் சர்மா அதிக அக்கறை காட்டுவார். அதே போன்ற கேப்டனாக நான் செயல்பட விரும்புகிறேன்.
ஒரு வீரரிடம் நீங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தினால் போதும். அதனால் அணிக்கு ஏற்படும் ஆக்கபூர்வமான மாற்றங்களை அடுத்த சில போட்டிகளிலேயே உணர முடியும். ஒவ்வொரு போட்டியிலும் கடைசி பந்து வரை கடுமையாக போராட வேண்டும். வெற்றி எப்போது வேண்டுமானாலும் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். ஆனால் நமது உழைப்பு நூறு சதவீதம் இருக்க வேண்டும்.
தனிநபராக உங்களால் எவ்வளவு திறமையாக விளையாட முடியுமோ அதை களத்தில் செய்ய வேண்டும். என்று கூறினார். ரிஷப் பந்த் குறித்து கருத்தை பகிர்ந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தோனி, ரோகித் சர்மா போன்று ரிஷப் பந்த்தும் சிறந்த கேப்டனாக உருவெடுப்பார் என்று பாராட்டினார். கேப்டன் அறிமுக விழா நிகழ்ச்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கானும் பங்கேற்றார்.
ஜனவரி 20, 2025 9:58 PM IST