தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட 17 விமானங்களுக்கு பாலாலயம் பூஜை இன்று (ஜன.20) நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடியிலும் என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி ராஜகோபுரம் பாலாலயம் நடைபெற்று, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலின் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், வல்லபை விநாயகர், நடராஜர், பைரவர் உள்ளிட்ட 17 விமானங்களுக்கு இன்று திங்கள்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விமான பிம்ப கடாஹர்சனம், ஹோம பூஜை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு விமான பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அத்தி மரத்திலான சித்ர பிம்பத்துக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. திருவனந்தபுரம், முட்டவிலா மடம் பிரம்மஸ்ரீ சுப்பிரமணியரு தந்திரி தலைமையில் தாந்திரீக முறைப்படி மூலவர் விமானத்துக்கு வாகனம் நடைபெற்றது. பின்னர் ஆவாகனம் செய்யப்பட்ட கும்ப நீர் மகா மண்டபத்துக்கு மேளதாளம் முழங்க வரப்பட்டு மூலவர் பாதத்துக்கு ஊற்றப்பட்டது.
மூலவர், வள்ளி, தெய்வானைக்கு போத்திமார்கள், சண்முகர், நடராஜருக்கு சிவாச்சாரியார்களும், பெருமாளுக்கு பட்டாச்சார்யார்களும், வல்லப விநாயகருக்கு விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர்களும் தலைமையில் திரிசுதந்திரர்களும் பூஜை செய்தனர்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், துணை ஆணையர் செல்வி, உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர் அருள்மணி, ஹெச்.சி.எல். நிறுவன நிர்வாக உதவித் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர், உதவித் தலைவர் பாபு, துணை பொது மேலாளர் மணிமாறன், மேலாளர் பிரவீன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, மாவட் அறங்காவலர் வாள் சுடலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.