அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், பணத்துக்காக ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஞானசேகரன் மீது ஏற்கனவே திருட்டு, அடித்தடி, வழிப்பறி என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பாக்கம் பகுதியைச் சோந்த ஞானசேகரன், முதலில் அந்தப் பகுதியில் வாகனத் திருட்டு, ஆடு, மாடு திருட்டு போன்ற சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பின்னா் அவா், பணத்துக்காக வீடு புகுந்து திருடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னா் அவா், தனது கூட்டாளிகளுடன் தொழிலதிபர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதை போலீஸாா் கண்டறிந்தனா்
தொழிலதிபரிடம் பறிப்பு: 2018-ஆம் ஆண்டு பிரபல டைல்ஸ் நிறுவன உரிமையாளரை கடத்தி, அவரது குடும்பத்தினரிடம் ஞானசேகரன் ரூ.25 லட்சம் கேட்டுள்ளார்.
அவர்கள் பணத்தை தர சம்மதம் தெரிவித்து, மதுராந்தகம் பாலத்தின் கீழே வந்து ரூ.12 லட்சம் கொடுத்தேன். அப்போது, ஞானசேகரன், மீதி பணத்தை தராவிட்டால் டைல்ஸ் நிறுவன உரிமையாளரை கொலை செய்து மிரட்டுவதாக மிரட்டினார்.
இதைக் கேட்டு அஞ்சிய அவரது குடும்பத்தினா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினரிடம் புகார் செய்தார். அவா்கள் இது தொடா்பாக விசாரணையில் ஈடுபட்டனா். மேல்மருவத்தூா் அருகே அந்த கும்பலை போலீஸாா் மடக்கி, டைல்ஸ் நிறுவன உரிமையாளரை மீட்டனர். ஆனால், ஞானசேகரன் தப்பிவிட்டாா். பின்னா் அவரை திண்டிவனம் அருகே போலீஸாா் கைது செய்தனா்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவத்துக்குப் பிறகு சென்னைக்கு இடம் பெயாந்த ஞானசேகரன், 2019-ஆம் ஆண்டு முதல் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளாா்.
டைல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கடத்தல் வழக்கில் துப்பாக்கி, கத்தியுடன் ஞானசேகரன் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.