அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், மூத்த வீரர் ஒருவருக்கே அந்த பொறுப்பு வழங்கப்படும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தின் போது விடுவிக்கப்பட்டார். மெகா ஏலத்தின் போது அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.
பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். இதேபோன்று ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், குவின்டன் டி காக் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்களும் கொல்கத்தா அணியில் உள்ளனர்.
இருப்பினும் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பதில் கொல்கத்தா அணிக்கு முடிவு எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கிய ரகானேவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கொல்கத்தா அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடந்து முடிந்துள்ள சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் அஜிங்யா ரகானேவின் ஆட்டம் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் ரஹானேவின் செயல்பாட்டால் திருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், பல ஐபிஎல் அணிகளில் விளையாடிய அனுபவம் மிக்கவர் என்பதால் அவரையே கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவுக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.