சென்னை: சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு சிறப்புச் சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஷனி ஷிங்னாபூருக்கு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணம் நவ.14ம் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் சுற்றுலாப் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.19,950 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, சென்னையில் இருந்து உடுப்பி – முருடேஸ்வருக்கு அடுத்த மாதம் 4ம் தேதி சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் மங்களூர், உடுப்பி, முருடேஸ்வர், சிருங்கேரி, ஹொர நாடு, தர்மஸ்தலா, குக்கே, சுப்ரமண்யா ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். 4 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.30,900. இது தவிர, சென்னையில் இருந்து குஜராத்துக்கு அடுத்த மாதம் 6ம் தேதி சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, நிஷ்கலங்க் மகாதேவ் கோயில், சோம்நாத் ஜோதிர்லிங்க கோயில், கிர் தேசியப் பூங்கா, போர் பந்தர், துவாரகா, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 9 நாட்கள் சுற்றுலாப் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.43,000 ஆகும்.
வெளிநாட்டு சுற்றுப் பயணம்: சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமான மூலமாக சுற்றுலாப் பயணம் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. 6 நாட்கள் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் 500 ஆகும். இது தவிர, துபாய்க்கு வரும் 28ம் தேதியும் இலங்கைக்கு அடுத்த மாதம் 1ம் தேதியும் விமானம் மூலமாக சுற்றுலா பயணம் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான கட்டணம், உள்ளூர் வசதி, தங்கும் வசதி, பயணக் காப்பீடு உள்ளிட்டவை பயணக் கட்டணத்தில் அடங்கும். இது குறித்து மேலும் தகவல்களைப் பெற 9003140680, 9003140682 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.