உதகை: உதகை ஓட்டல்கள், குன்னூர் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் பள்ளியான ஸ்டேன்ஸ் பள்ளிக்கு 2வது முறையாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல், ஊட்டியில் உள்ள நான்கு ஓட்டல்களுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நான்கு ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கம் போல் இ-மெயில் மூலமாக இந்த மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவி கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் அந்த நான்கு நட்சத்திர ஓட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கும் இன்று ஐ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ – மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இதே பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இதே பள்ளிக்கு இரண்டாவது முறையாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அனைவரும் பள்ளியின் நுழைவாயில் முன்பு குவிந்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.