அகமதாபாத்: அகமதாபாத் நகரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி மெகுல் தாக்கர். அவரிடம் 2,100 கிராம் தங்கம் வாங்கிய இருவர் தாங்கள் கொண்டு வந்த பையில் ரூ.1.6 கோடி பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். அதை எண்ணிப் பார்க்க நகைக்கடை ஊழியர்கள் திறந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
பை இருந்து முழுவதும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள். சுவாரஸ்யமாக அந்த கள்ள நோட்டில் மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் படம் இடம்பெற்றிருந்தது. மேலும், ”ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா” என்று அச்சடிக்க வேண்டிய இடத்தில் “ரிசோல் பேங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்டது.
தற்போது இந்த கள்ள ரூபாய் நோட்டு படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் ”500 ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக என் படம். எதுவேண்டுமானாலும் நடக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறை ஆய்வாளர் ஏ.ஏ. தேசாய் கூறுகையில், ”கள்ள நோட்டு கும்பல் போலியான கொரியர் சேவை நிறுவனத்தை நடத்தியுள்ளனர். அண்மையில் ஷாகித் கபூர் இயக்கத்தில் வெளியான ”பார்சி” வெப் சீரியஸால் ஈர்க்கப்பட்டு அவர்கள் கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என்றார்.