பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவான ‘யாகி’ (யாகி )புயல் பிலிப்பைன்ஸ், தென் சீனா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வியட்நாம் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவான யாகி புயல் கடந்த சனிக்கிழமை அன்று வியட்நாம் தலைநகரான ஹனோய் மாகனத்தில் கரையை கடந்தது. இந்தப் புயலின் காரணமாக வியட்நாமின் வட கடலோர பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் கரையை கடந்த பிறகும்கூட வியட்நாம் வட கடலோர பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
இந்தக் கன மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி இது வரை 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 39 பேர் காணாமல் போனதாகவும், 752 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்தப் புயல் தொடர்பாக அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆசிய கண்டத்தில் இந்த ஆண்டு இதுவரை வந்த புயல்களிலேயே இது தான் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. மேலும், வியட்நாமில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த புயலாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
வியட்நாமின் வடக்கு பகுதியில் பல பிரபலமான மற்றும் உலக அளவில் ஏற்றுமதி முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, பாக் ஜியாங் மற்றும் தாய் நுயென் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆகிய தொழிற்சாலைகள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு வியட்நாமில் உள்ள பல ஆறுகளிலும் நீரின் அளவு அபாயக் கட்டத்தை தாண்டி உயர்ந்து வருவதாகவும், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் உள்ள பூதோ எனும் பகுதியில் ஓடும் சிவப்பு நதியின் மீது அமைந்திருக்கும் 30 வருடம் பழமையான பாலம் இந்த இயற்கை சீற்றத்தால் இரண்டாக உடைந்தது. இந்த உடைப்பின் போது கார், லாரி, இருசக்கர வாகனங்கள் அந்தப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. இதில் சில வாகனங்கள் பாலம் உடைந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த சிக்கியவர்களில் மூன்று பேர் விபத்தில் சிக்கிய 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பால விபத்தைத் தொடர்ந்து, ஹனோய்யில் உள்ள மிகப்பெரிய பாலமான சுவாங் டுவாங் பாலத்தில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல பாலங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மக்களை மீட்கும் நடவடிக்கையிலும் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது.
இதுவரை யாகி புயலினால் வியட்நாமில், 300 பில்லியன் அளவுக்கு சேதம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபோக வடக்கு வியட்நாமில், 1,48,600 ஹெட்கர் விளைநிலங்களும், 50,000 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
.