தென்காசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பழனிசாமி ஆகியோர் காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், தாயில்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தம்பதியை, கிருஷ்ணவேணியின் பெற்றோர் ஜெயக்குமார், அய்யம்மாள், உறவினர்கள் சிவா, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
காதலை ஏற்றுக் கொண்டதாகவும், முறைப்படி உறவினர்களை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி, தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். இதை நம்பாத கிருஷ்ணவேணி, பழனிசாமி ஆகியோர் அவர்களுடன் செல்ல மறுத்துள்ளனர். எனினும், வலுக்கட்டாயமாக அவர்களை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த காரை தென்காசி மாவட்டம் நோக்கி செல்வதையறிந்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேங்கடம் குருவிகுளம் சோதனைச் சாவடியில், திருவேங்கடத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், புதுமணத் தம்பதியரைத் தவிர, மற்ற 5 பேரும் காரில் இருப்பது தெரியவந்தது.
காட்டுப் பகுதியில்… அவர்களிடம் விசாரித்தபோது, காதல் தம்பதியை குறிஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வைத்து கொலை செய்ய முயன்றதாகவும், அந்த வழியாக வந்த முதியவர் இதைப் பார்த்து கூச்சலிட்டதால், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு காரில் தப்பி வந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தம்பதியை மீட்ட வெம்பக்கோட்டை போலீஸார், அவர்களை காரில் கடத்திச் சென்று, கொலைசெய்ய முயன்ற பெற்றோர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.