சென்னை: தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி (36). இவர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றிருந்தார். வியாசர்பாடி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி, பி.வி.காலனியில் அவரது பெண் தோழி வீட்டில் தங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த 7 பேர் கும்பல் கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து ஆசைதம்பியை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
எம்.கே.பி. நகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம், கொலையாளி யார் என சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்புத் துலக்கப்பட்டது.
விசாரணையில், ஆசைதம்பி வியாசர்பாடி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை மிரட்டி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு கூட வியாசர்பாடி கள்ளுக்கடை பகுதிக்குச் சென்று ஆட்டோ ஓட்டுநர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த வடிவேலு (38), அவரது கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (30), ஜெயசங்கர் (42), அருண்குமார் (37), பாலமுருகன் (37) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.