தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் கால் முறிந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண், கடந்த 12-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுகுறித்து அந்தப் பெண் புகார் அளித்தபுகாரின் பேரில் தெற்கு கோட்டையைச் சேர்ந்த கவிதாசன்(25), அவரது நண்பர்கள் திவாகர் (27) பிரவீன்(20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் நேற்று முன்தினம் 7 பிரிவுகளில் கைது செய்தனர்.
அவர்களிடம், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. திடீரென வழக்கின் முக்கிய நபரான கவிதாசன் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றார்.
பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை: அப்போது அவர் கீழே விழுந்ததில், அவரது வலது கால் முறிந்தது. இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.