டெபாசிட் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மற்றும் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்த ஒரு வங்கி அக்கவுண்டிற்கு 4 நாமினிகளை நியமிக்க உதவும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்திய, சட்டங்கள் (திருத்தம்) மசோதாவில், 2024-ஆனது பேங்க் அக்கவுண்ட், லாக்கர் போன்றவற்றுக்கு ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்வதற்கான பரிந்துரை உள்ளது. அதாவது இந்த மசோதாவின் விதியின்படி, ஒரு வங்கி கணக்கு வைத்திருப்பவர் நான்கு நபர்களை நாமினிகளாக நியமித்து கொள்ளலாம்.
பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தற்போது தனது அக்கவுண்டிற்கு நாமினியாக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஒருவேளை அக்கவுண்ட் ஹோல்டர் இல்லாத நிலையிலும் கூட அவரது பணம் அவர் நியமிக்கும் நாமினிக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் நாமினி நியமிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக வங்கித் துறை வளர்ச்சியடைந்து வருவதால் முதலீட்டாளர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட மசோதாவில் நாமினி நியமிக்கும் விஷயத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த மசோதா இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம், 1955, வங்கி நிறுவனங்கள் சட்டம், 1970, மற்றும் வங்கி நிறுவனங்கள் சட்டம் , 1980 உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்ய முன்மொழிகிறது. மேலும் இது இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் அறிக்கை செய்வதில் நிலைத்தன்மையை வழங்குவதற்கும், டெபாசிட் செய்பவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பொதுத்துறை வங்கிகளில் தணிக்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், பரிந்துரைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட மசோதா ஆகும்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவில், உரிமை கோரப்படாத லாப ஈவுத்தொகை, பங்குகள், வட்டி உள்ளிட்டவை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்ற அனுமதி அளிக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இதனிடையே காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளிடம் உள்ளது எனக் கூறி மசோதா அறிமுகப்படுத்தப்படுவதை எதிர்த்தார். அதே போல RSP உறுப்பினர் என் கே பிரேமச்சந்திரன் ஒரு மசோதா மூலம் ஐந்து சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
டிஎம்சி உறுப்பினர் சவுகதா ராய் பேசுகையில் இந்த மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை நிர்வாக முடிவுகள் மூலமே செய்திருக்கலாமே என குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி சேவையை தவிர மற்ற அனைத்தையும் கையாளும் கூட்டுறவு சங்கங்களை குறைத்து மதிப்பிட்டு எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள் செயல்படுத்தவில்லை. ஒன்றிரண்டு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களை கருத்தில் கொண்டே தற்போதைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல நீதிமன்றங்களின் தீர்ப்புகளை கவனத்தில் கொண்டு சமீபத்திய திருத்தங்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.