சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிஅமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முகமது சலீமிடம், “அமலாக்க துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபம் உள்ளதா?” என நீதிபதி கேள்விஎழுப்பினார். அதற்கு முகமது சலீம்,“நாளை (இன்று) எனது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் குடும்பத்தினரைப் பார்க்க அனுமதி வழங்கவேண்டும்” எனக் கோரினார்.
அதையடுத்து, நீதிபதி எஸ்.அல்லி, குற்றம் சாட்டப்பட்ட முகமது சலீமை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும், இன்று (ஆக.15) மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரை அவர் தனது குழந்தையைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினருக்கு உத்தரவிட்டார்.