செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மங்கலம் கிராமத்தில் ருத்திரகோட்டீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ காளியம்மன் கோயில். இக்கோயிலில், வட்டப்பாறை ஒன்று உள்ளது. அதன் மீது ஸ்ரீகாளியம்மன் அமர்ந்த நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வேண்டியவர்களுக்கு வேண்டும் வரத்தை தந்தருள்கிறார்.
காளி என்றால் உக்கிரத்துடன், பயங்கரமான ஆயுதங்களுடன் காட்சி தருவதைத்தான் தரிசித்திருப்போம். ஆனால் ஸ்ரீ காளியம்மன் கனிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனால் ‘சாந்த சொரூபினி’ என்று இங்குள்ள அம்மனை போற்றுகிறார்கள் பக்தர்கள். அம்மன் கோயில்கள் என்றாலே ஆடி மாதம் சிறப்பு; மங்கலம் காளியம்மனுக்கோ மார்கழி மாதம் சிறப்பு.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து, இரண்டு வேளையும் நீராடி, அம்மனை வலம் வந்து வணங்கி வழிபடுகின்றனர். மார்கழி மாதத்தின் இரண்டாம் நாள் ஸ்ரீ காளியம்மனுக்கு சுமங்கலி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். அதேபோல், மார்கழி மாதத்தின் மூன்றாம் நாள் பிரசித்திப் பெற்ற சங்கு தீர்த்த குளத்தில் நன்னீர் எடுத்து, மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இவ்விழாக்களில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசித்து, சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பது. இது தவிர செவ்வாய், வெள்ளி சிறப்பு வழிபாடுகளும், ஆடி மாத வழிபாடுகளும் ஸ்ரீ காளியம்மன் கோயிலில் நடைபெறுகின்றன.