சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மா, தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மொத்தம் 159 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, இந்த ஃபார்மட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, 4231 ரன்களைக் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல, 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல்லுடன் சேர்ந்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.
சிக்சர் மன்னனான ரோகித் சர்மா, 200 சிக்சர்கள் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனை மட்டுமல்ல, 205 சிக்சர்களுடன் முதலிடத்திலும் உள்ளார். அதேபோல 383 பவுண்டரிகளை விளாசியுள்ள ரோகித் சர்மா அதிக பவுண்டரிகள் அடித்த இந்திய வீரராகவும் திகழ்கிறார். இந்திய அணிக்காக அதிக போட்டிகள் வென்று கொடுத்த கேப்டனாகவும் ரோகித் சர்மாவே முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க:
உலகக்கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விடைபெற்றார் விராட் கோலி..
நேற்றைய டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, டி20 ஃபார்மேட்களிலிருந்து இந்திய அணியின் ரன்மிஷின் விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். இதையடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டி20 ஃபார்மேட்களிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, “நான் டி20 ஃபார்மேட்கள் மூலமாக தான் இந்திய அணிக்காக விளையாட தொடங்கினேன். இந்த டி20 உலகக்கோப்பையை இப்போது நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. உலகக்கோப்பையை வென்ற பிறகு நான் எனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இருந்தேன். உலகக்கோப்பையை வென்ற தருணத்தில் எப்படி இருந்தது என்ற வார்த்தைகளால் என்னால் சொல்ல இயலாது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என தெரிவித்தார்.
.