நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இனி கரையிலிருந்துவாறே துல்லியமாகக் காணலாம். லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது, என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில், நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை காண்பதற்கு அமைக்கப்பட்டு வரும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒலி மற்றும் ஒளி காட்சி கூடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 26) பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்; “கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையில் லேசர் தொழில்நுட்ப திட்டத்தினை செயல்படுத்த ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிக்கூடத்தில் 200 பேர் பார்வையாளர்களாக அமரும் படி செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது தள உபகரணங்களை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிவடையும். இத்திட்டம் திருவள்ளுவர் சிலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.
இந்த ஆய்வின்போது, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.