லக்னோவில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது லக்னோ.
லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.
ரோஹித் சர்மா 5 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 10 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்னிலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நெஹல் வதேரா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 18 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.
எளிதான இலக்காக இருந்தாலும் வெற்றி பெற்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் லக்னோ அணி வீரர்கள் பதற்றத்துடனேயே விளையாடினர். தொடக்க அர்ஷின் குல்கர்னி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார்.
தீபக் ஹுடா 18 ரன்களும், ஆஷ்டன் டர்னர் 5 ரன்களும், ஆயுஷ் பதோனி 6 ரன்களும் எடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 பந்துகளில் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிகோலஸ் பூரன் 14 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த கடைசி ஓவரின் 2 ஆவது பந்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
.