ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதனால் 2 ஐபிஎல் அணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதற்காக சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இதனையொட்டி அதில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று நியூசிலாந்து அணி வீரர்களை அறிவித்தது. இன்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை கவனத்தில் கொண்டு இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றில் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இது இங்கிலாந்து அணி வீரர்கள் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். இதேபோன்று கொல்கத்தா அணியில் ஃபிலிப் சால்ட் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ரன்களை சேர்க்கிறார்.
சென்னை அணியின் வெற்றியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலியின் பங்களிப்பு உள்ளது. இருப்பினும், இங்கிலாந்து அணி வீரர்கள் பிளே ஆஃப் சுற்றை தவிர்த்தால் சென்னையுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு அதிக வாய்ப்புகள் உள்ள ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
.