பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், ஷாரூக்கான் ஆகியோர் அரைச்சதம் அடித்துள்ளனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் அணி 200 ரன்கள் குவித்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர்.
கில் வழக்கம் போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். சாஹா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 3 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் – ஷாரூக்கான் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.
இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷாரூக்கான் 5 சிக்சர்களுடன் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரன்களை குவித்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். மில்லர் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 200 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களுரு அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
.