கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது முக்கிய காரணமாக இருந்த ஜோனி பேர்ஸ்டோ, பவர் பிளேயில் செய்த சில விஷயங்கள் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் வீரர்களாக களமிறங்கிய சுனில் நரேன், ஃபிலிப் சால்ட் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவித்தனர்.
முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 138 ரன்களை குவித்த நிலையில், ஃபிலிப் சால் 6 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 75 ரன்களும், சுனில் நரேன் 32 பந்துகளில் 71 ரன்களும் குவிந்தனர். இவர்களை தொடர்ந்து களம்கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் தங்கள் பங்குக்கு ரன்களை குவித்ததால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்களை குவித்தது.
262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜோனி பேர்ஸ்டோ ஜோடி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடத் தொடங்கியது. இதன் காரணமாக, பிராப்சிம்ரன் சிங் வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார். 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த போது, ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஷஷாங்க் சிங், ஜோனி பேர்ஸ்டோவுக்கு பக்கபலமாக ரன்வேட்டை தொடங்கினார். இருவரும் சேர்ந்து சிக்சர்களை பறக்கவிட்டு வாண வேடிக்கை காட்டியதால், 15 ஓவர்களில் அந்த அணி 201 ரன்களை குவித்தது.
கடைசி 5 ஓவர்களில் 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோனி பேர்ஸ்டோ வெறும் 45 பந்துகளில் சதம் அடித்தார். இறுதியில் 8 பந்துகள் எஞ்சிய நிலையில் 2 பந்துகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது பஞ்சாப் கிங்ஸ். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 262 ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
இதையும் படிங்க :
டி-20 உலகக் கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங் நியமனம்
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜோனி பேர்ஸ்டோ, தொடக்கத்திலேயே அடித்து விளையாட வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்திருந்ததாக தெரிவித்தார். அதனால், தொடக்கம் சரியாக இருந்ததாகவும், 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.
.