பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களைக் கொண்ட காதல் கடலில் மூழ்கடித்த திரைப்படம் ‘டைட்டானிக்’.
ஆஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரம் கணக்கான பயணிகளோடு தொடங்கியது டைட்டானிக். பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்தச் சோகமான சம்பவத்தை மையப்படுத்தி, கப்பலில் ஒரு காதல் கதை இருந்தால் எப்படியிருக்கும் என்பதாக ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ‘டைட்டானிக்’ படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் ‘டைட்டானிக்’ கப்பலில் இருந்து மரக்கதவு ஏலம் விடப்பட்டது. படத்தின் க்ளைமாக்ஸில் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவும், நடிகை கேட் வின்ஸ்லெட்டும் இந்த மரக்கதவைப் பிடித்தபடி மிதந்தவாறு இருப்பார்கள். இந்தக் கதவுதான் நாயகியின் உயிரைக் காக்கும்.
அந்த மரக்கதவை 718,750 டாலருக்கு ஒருவர் ஏலம் எடுத்திருக்கிறார். அதாவது இந்திய மதிப்புப்படி கிட்டத்தட்ட 6 கோடிக்கு அந்த ‘டைட்டானிக்’ கப்பலில் இருந்து மரக்கதவை வாங்கி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி இந்த ஏலத்தில் 1980-ல் வெளியான ‘தி ஷைனிங்’ படத்தில் ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி, 1984-ல் வெளியான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்டு தி டெம்பிள் ஆஃப் டூம்’ படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்ளிட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. அதில் ‘டைட்டானிக்’ மரக்கதவு அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.