சர்ஃபராஸ் டி20 க்களுக்கான வீரர். அவர் ரெட்பாலுக்கு செட்டே ஆகமாட்டார் என கூறினார். இதனால் ரஞ்சி போட்டிகளில் மும்பை அணியில் சர்ஃபராசூக்கான இடமும் கிடைக்கவில்லை.
மகனைப் பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றிய நௌஷத் கான் அவரை உத்தரப்பிரதேச அணிக்காக ஆடச் சொல்லி அங்கே அழைத்து செல்கிறார். ஆனால், அங்கேயும் அவருக்கு முறையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மூன்று சீசன்களில் எட்டு போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். அப்பா – மகன் இருவருக்குமே விரக்தியும் கோபமும் மேலோங்கியிருந்தது.
இந்தச் சமயத்தில்தான் இக்பால் அப்துல்லா சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு நௌஷத் கானின் மீது இடியாக விழுகிறது. ஐ.பி.எல்-இல் கொல்கத்தா அணிக்காக ஆடிய இக்பால் அப்துல்லாவை அனைவருக்கும் தெரியும். அவரிடம் கிரிக்கெட் ஆடும் திறன் உள்ளது என்பதை அறிந்து அவருக்குப் பயிற்சி அளித்து உதவியாக நின்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஆடக் காரணமாக இருந்தவர் நௌஷத் கான்.
அந்த இக்பால் அப்துல்லா ஒரு கருத்து மோதலில், “நான் என் திறமையால் இந்த இடத்தை எட்டியிருக்கிறேன். உங்களால்தான் எல்லாம் நடந்ததெனில் நீங்கள் உங்கள் மகனை இந்திய அணிக்கு ஆட வைத்துக் கொள்ளுங்கள்!” என சர்ஃபராஸின் நெஞ்சில் வஞ்சக நகத்தினால் கீறினார். இதன்பிறகுதான் அவரின் நெஞ்சில் இன்று தீரமாக லட்சிய நெருப்பு பற்றிக் கொண்டது.