ராக்கி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் சாணிக் காயிதம். ராக்கி அதன் வன்முறைக்காக பேசப்பட்டது. சாணிக் காயிதம் படத்தையும் வன்முறையில் தோய்த்து எடுத்த இயக்குனர்.
கதைக்கு தேவையான வன்முறையை படத்தில் வைப்பது ஒரு ரகம் என்றால், வன்முறைக்காக கதையை உருவாக்குவது இன்னொரு ரகம். சாணிக் காயிதம் இரண்டாவது. சிலரை கொடூரமாக பழிவாங்க நியாயமான காரணம் வேண்டும் என்பதற்காக, நாயகி பொன்னியையும், அவளது குடும்பத்தையும் சாதிய வன்மம் எப்படி சிதைக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்களே தவிர, ஒடுக்கப்பட்டவர் மீதான அக்கறையோ, சாதிய படிநிலைகள் மீதான கோபமோ இயக்குனரிடம் இல்லை.
கொலைகளை எப்படி விதவிதமாக, கொடூரமான முறையில் செய்யலாம் என்பதை படம் விலாவாரியாக காட்சிப்படுத்துகிறது. நீதிமன்ற காவலில் இருந்து தப்பிக்கும் கைதிகளை போலீசார் தேடுவது, நடக்கிற கொலைகளுக்கான விசாரணையோ படத்தில் எங்கும் வருவதில்லை. நாயகியின் வீடு, அவளுக்கு உதவி செய்யும் சங்கையாவின் வீடு, அவர்கள் பழி வாங்கும் மனிதர்கள் பதுங்கியிருக்கும் கட்டடங்கள், அவர்கள் டீ அருந்தும் கடைகள் என அனைத்தும் தன்னந்தனியாக ஊரில் இருந்து துண்டிக்கப்பட்டது போல் காட்டப்படுகின்றன. கிளைமாக்ஸில் ஊருக்குள் நடக்கும் களேபரத்தின் போதும் ஊர்க்காரர்கள் ஒருவர்கூட எட்டிப் பார்ப்பதில்லை.
இதையும் படிங்க.. ராதிகாவுக்கு விருது வாங்கி தந்த காமெடி நடிகர் இயக்கிய படம்!
கிளைகளை கத்தரித்த நெடுமரம் போல வன்முறை மட்டும் வானுயர துருத்திக் கொண்டு நிற்கிறது.பொன்னியாக கீர்த்தி சுரேஷ். எந்த வித அழகுணர்வையும் வெளிப்படுத்த வாய்ப்பில்லாத கதாபாத்திரம். இறுக்கமான முகபாவத்தில் வன்மத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அவரது தந்தையின் முதல் மனைவியின் மகன் சங்கையாவாக செல்வராகவன். பொன்னிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என தொழில்நுட்ப ஏரியாக்கள் குறைக்கப்படவில்லை.
கசாப்பு கடைகளை காட்டுவதில் கூட ஒரு கலையுணர்வு இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல், வன்முறைக்காக ஒரு கதையை தேர்வு செய்து, விதவிதமாக கொலைகளை நிகழ்த்திக் காட்டுவதில் என்ன ரசனை இருக்கிறது? பிழையான இந்த நோக்கத்தால் பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிப்பு உள்ளிட்ட நேர்மறை விஷயங்களும் அடிபட்டுப் போகின்றன. கழிவுகளை நீக்கிவிட்டு மீன்துண்டுகளை சமைப்பதற்குப் பதில், கழிவுகளை சமைத்திருக்கிறார் இயக்குனர்.
யதார்த்தத்திற்கு இடம் தராமல், மூளைக்குள் முக்கி பிரசவிக்கும் படங்கள் எப்படியிருக்கும் என்பதற்கு சாணிக் காயிதம் சிறந்த உதாரணம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: .